
வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, “வாய்ப்பு கிடைத்தால் பார்ப்போம்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார். தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து நிலவி வரும் சூழலில், நாமலின் இந்தப் பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டு 2026.02.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்ததுடன், பலரும் இதனை உண்மை என எண்ணி கமெட் செய்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
வாய்ப்பு கிடைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தமை தொடர்பில் ஏதேனும் செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது கடந்த 2026.01.31 ஆம் திகதி மாத்தறை பகுதியில் உள்ள விகாரைகளுக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அவர் ஊடகங்கவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.
இதன்போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டால் நீங்கள் அவருக்கு ஆதரவளிப்பீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம், நாம் எவ்வாறாயினும் அரசியல் ரீதியில் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது எனவே அவ்வாறு ஒரு அராசாங்கம் வருமா இல்லையா என்பது தொடர்பில் காலத்தால் முடிவெடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பதவிகளுக்காக நாம் ஆட்சியை ஏற்பவர்கள் அல்ல என்பதனையும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அந்த இடத்தில் ஒரு போதும் இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைவீர்களா என்ற கேள்வி ஊடகவியலாளர்களினால் கேட்கப்படவில்லை என்பதுடன், அவர் அதற்கு வாய்ப்பு கிடைத்தால் இணைவோம் என்ற பதிலை தெரிவிக்கவில்லை என்பதனையும் அறியமுடிகின்றது.
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்ற கருத்துக்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் மற்றும் எக்ஸ் தள பக்கங்களில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடப்பட்டுள்ளாரா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த பதிவுகளையும் காணமுடியவில்லை.
அவ்வாறே கடந்த ஜனவரி 26ஆம் திகதி ஒடிசாவிலுள்ள கே.ஐ.ஐ.ரி பல்கலைக்கழத்தில் (KIIT University, Odisha) நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல் ராஜபக்ஷ ஆற்றிய உரை அவரது பேஸ்புக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் நாம் அந்த உரையை ஆராய்ந்த போதும் அதிலும் அவர் அவ்வாறான எந்த கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை என்பதனை அறியமுடிந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
எனவே சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பில் தெளிவினை பெற்றுக்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தொடர்புகொண்டு நாம் இது குறித்து கேட்டிறிந்தோம்.
இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தொடர்பிலான எந்தக் கருத்தையும் தான் வெளியிடவில்லை எனவும் வரவிருக்கும் தேர்தல்கள் குறித்து இப்போது பேசுவது மிகவும் முன்கூட்டியதாகும். எதிர்கால அரசியல் கூட்டணிகள் அல்லது இணைப்புகள் பற்றிய எந்தத் தீர்மானமும் இந்த நிலையில் எடுக்கப்படவில்லை. எனது பெயரை குறிப்பிட்டு பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல, என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடகப் பிரிவு
மேலும் இந்த விடயம் தொடர்பில் நாம் ஐக்கிய மக்கள் சக்தி ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டு வினவியிருந்தோம். இதன்போது மேற்குறிப்பிட்ட விடயங்களின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் இருந்து, நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து அடுத்த அரசை அமைப்பது தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை எனவும் அது தொடர்பான எந்தவித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்ததாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், மாத்தறையில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டால் நீங்கள் அவருக்கு ஆதரவளிப்பீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, அவர்களுக்கு அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம் என்றே குறிப்பிட்டிருந்தார் என்பது கண்டறியப்பட்டது.
ஆனால் இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசவுடன் இணைவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு நாமல் சந்தர்ப்பம் கிடைத்தால் இணைவோம் என தெரிவித்தார் என பகிரப்படும் விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டு பகிரப்படுகின்றமை தெளிவாகின்றது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:‘வாய்ப்பு கிடைத்தால் சஜித்துடன் இணைவோம்’ என நாமல் தெரிவித்தாரா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


