
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, ஒரு தாயின் உடலும் அவரது நான்கு வயது மகனின் உடலும் மீட்கப்பட்டன.
அறிக்கைகளின்படி, தாயும் மகனும் ஒரே உயிர் காக்கும் அங்கியை (life jacket) அணிந்திருந்தனர் எனவும், மேலும் அந்தத் தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியே உயிரிழந்திருந்தார் உனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், அந்த விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகனின் புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.
எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் மனதை உலுக்கியது பாதுகாப்பு அங்கி அணிந்திருந்தும் துரதிஷ்டவசமாக உயிரிழப்பு.!!
_நர்மதை ஆற்றின் பார்கி அணையில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே லைப் ஜாக்கெட்டில் தாய் தனது 4 வயது மகனை கட்டியணைத்தபடி கிடைத்த உடல்கள் காண்போர் மனதை உலுக்கியது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நிகழ்ந்த சொகுசு படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.
சுற்றுலாவுக்காக சுமார் 40 பேருடன் சென்ற அந்த படகு நடுநீரில் கவிழ்ந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 28 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான சிலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுமார் 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினர் படகின் இடிபாடுகளுக்கு இடையே சென்றபோது, டெல்லியைச் சேர்ந்த ஜூலியஸ் மெஸ்ஸி மற்றும் அவரது கைக்குழந்தை சியா மெஸ்ஸி ஆகியோரின் உடல்கள் ஒன்றாகக் கண்டெடுக்கப்பட்டன.
மரணத்தின் விளிம்பிலும் தனது குழந்தையைத் தாய் ஜூலியஸ் மார்போடு அணைத்தபடி இருந்த உருக்கமான காட்சி, கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் எனப் உயிர் தப்பியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படகில் இருந்த பயணிகளுக்குப் பாதுகாப்பு கவச உடைகள் (Life Jackets) வழங்கப்படவில்லை என்றும், அவை பூட்டிய அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அனுபவம் இல்லாத ஓட்டுநர், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியது மற்றும் மோசமான வானிலையிலும் படகை இயக்கியது போன்ற விதிமீறல்களே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
ஆக்ராவிலிருந்து வந்த சிறப்பு மீட்புக் குழுவினர் கடும் சவால்களுக்கு இடையே படகின் பாகங்களை உடைத்து உடல்களை மீட்டுள்ளனர். லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பயணிகளின் பாதுகாப்பைத் தாரை வார்த்த இந்தச் சம்பவம், தற்போது நிர்வாகத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என தெரிவிக்கப்பட்டு இந்த புகைப்படம் 2026.05.01 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த படகு விபத்து தொடர்பிலும் அதில் உயிரிழந்த தாய் மகன் குறித்த செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட புகைப்படம் எந்த செய்திகளிலும் வெளியாகியிருக்கவில்லை என்பது எமது ஆய்வின் மூலம் அறியமுடிந்தது.Link | Link
மேலும் நாம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தை அவதானித்த போது அந்தப் புகைப்படத்தில் சில அசாதாரணமான அம்சங்களை அவதானிக்க முடிந்தது. தாயின் புருவங்கள், தாய் மற்றும் மகன் இருவரின் தோலின் அமைப்பு மற்றும் தாயின் வளையல் ஆகியவை இயற்கையாக இல்லை. இத்தகைய மாற்றங்கள் பொதுவாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களில் காணப்படுபவை ஆகும்.

ஆகவே நாம் குறித்த புகைப்படத்தினை Ai Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்திய போது அந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.


இது குறித்து நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் இந்த தகவலை பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், அந்தப் புகைப்படத்திற்கும் பார்கி அணை விபத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது அல்லது முற்றிலும் தொடர்பற்ற வேறொரு ஆதாரத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் குறித்த படகு விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் 4 வயது மகளின் உண்மையான புகைப்படத்தை இங்கே காண்க. Link | Link

இதன் மூலம், சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த புகைப்படம் பார்கி அணை படகு விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகனுடையது அல்ல என்பது தெளிவாகிறது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சொகுசுப் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் 4 வயது மகனின் புகைப்படம் என தெரிவித்து பகிரப்படும் புகைப்படமானது தவறானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


