குருணாகல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தமை உண்மையா?

False சமூகம் | Society

சில சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்கள் வாயிலாக, உணர்வுப்பூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நம்ப முடியாத செய்திகளை உண்மைச் சம்பவங்கள் எனக்கூறி, போலிச் செய்திகளை உருவாக்கிப் பகிர்ந்து வருவதை பரவலாகக் காணமுடிகிறது. அவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகள் தொடர்பான ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook |Archived Link 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் தமிழ் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 9 பெண்  குழந்தைகள் பிறந்துள்ளன இந்த குழந்தைகளுக்கும் தாய்க்கும் ஆரோக்கியம் வேண்டி குறித்த பதிவு பகிரப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்) 

ஒரு தாய் ஒன்பது குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த சம்பவம் ஏதேனும் ஒரு பகுதியில் இடம்பெற்றிருந்தால், அது குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எமது ஆரம்பகட்ட உண்மைச் சரிபார்ப்பின் போது, அவ்வாறானதொரு செய்தி எந்தவொரு பிரதான ஊடகத்தினாலும் வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.

ஆகவே நாம் இது குறித்து குருணாகல் போதனா வைத்தியசாலையை தொடர்புகொண்டு வினவினோம்.

குருணாகல் போதனை வைத்தியசாலை

இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் போது, குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் வருணி ஹேரத் அவர்கள், சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த செய்தி முற்றிலும் போலியானது என்றும், குருணாகல் போதனா வைத்தியசாலையில் அத்தகைய ஒன்பது குழந்தைகளின் பிறப்பு எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் இதுவரை பதிவான அதிகூடிய குழந்தைப் பிறப்பு 6 குழந்தைகள் (Sextuplets) மட்டுமே. இது 2021 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது.Link | Link 

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் (Nonuplets) பிறந்து உயிர் பிழைத்த சம்பவம் உலகிலேயே மிக அபூர்வமானது. அவ்வாறான ஒரு சம்பவம் மொரோக்கோ நாட்டில் 2021 ஆம் ஆண்டு மாலி நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு இடம்பெற்று கின்னஸ் சாதனையில் பதிவாகியுள்ளது.Link

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் குருணாகல் போதனா வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன்  அத்தகைய ஒரு பிரசவம் இடம்பெறவில்லை என்பதை குருணாகல் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: குருணாகல் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தமை உண்மையா?

Fact Check By: Suji shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *