
மத்தியக் கிழக்கு போர்ச்சூழலில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஈரான் ஐக்கிய அரபு இராச்சியம் மீது மேற்கொண்ட தாக்குதலை அந்நாட்டு படையினர் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
Big Breaking : அமெரிக்க ராணுவக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல்! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (04.05.2026) ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.
மேலும் இதனை பல ஊடகங்கள் உள்ளிட்ட சமூக ஊடக பயனர்களும் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நேற்றைய தினம் ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளை நாம் ஆராய்ந்த போது அவற்றில் மேற்குறிப்பிட்ட காணொளி வெளியாகியிருக்கவில்லை. Link | Link
ஆகவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது இந்த காணொளி தொடர்பான தகவல் Fact Nameh என்ற x தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதில் இந்த காணொளி பழையது மற்றும் இன்றைய தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல. இந்த காணொளி 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RIMPAC 2016) போது, பணியிலிருந்து ஓய்வுபெற்ற USS Thach (FFG-43) போர்க்கப்பலை மூழ்கடிக்கும் பயிற்சியைப் (SINKEX) பற்றியதாகும் . என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டிருந்தது.

ஆகவே நாம் இந்த காணொளி தொடர்பில் மேலதிக ஆய்வினை மேற்கொண்டிருந்தோம் இதன்போது, CNN செய்திச் சேவையின் YouTube தளத்தில் 2016 ஆம் ஆண்டு குறித்த காணொளி பகிரப்பட்டிருந்தது. அதில் ஹவாய் தீவுகளின் கடற்கரைக்கு அப்பால் நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் போது, USS Thach போர்க்கப்பல் கடுமையாகத் தாக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அமெரிக்க ஆயுதப்படைகளின் (இராணுவம், கடற்படை, கடற்படைப் படைப்பிரிவு, விமானப்படை மற்றும் கடலோர காவல்படை) நிகழ்வுகள் மற்றும் பணிகள் குறித்த தகவல்களை வழங்கும் AiirSource Military இன் YouTube தளத்திலும் 2016 ஆம் ஆண்டு இந்த காணொளி பகிரப்பட்டிருந்தது.
அந்த காணொளியில் 2016-ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RIMPAC 2016) போது, பணியிலிருந்து ஓய்வுபெற்ற USS Thach (FFG 43) கப்பலை மூழ்கடிக்கும் பயிற்சி என குறிப்பிடப்பட்டிருந்தது.
USS Thach (FFG-43) கப்பலின் இறுதிப்பயணம்
USS Thach என்பது அமெரிக்க கடற்படையின் ‘Oliver Hazard Perry-class ‘ ரகத்தைச் சேர்ந்த ஒரு ஏவுகணைப் போர்க்கப்பலாகும். சுமார் 29 ஆண்டுகள் சிறப்பாகச் சேவையாற்றிய இந்தக் கப்பல், 2013-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகப் பணியிலிருந்து ஓய்வுபெற்றது.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற இந்தக் கப்பல், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற RIMPAC (Rim of the Pacific) எனும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சியின் போது ஒரு இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு SINKEX என்று பெயரிடப்பட்டிருந்தது.
ஹவாய் தீவுகளின் கடற்கரைக்கு அப்பால் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இராணுவப் படைகள் இணைந்து, தங்களின் ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்களின்(Torpedoes) துல்லியத்தை சோதித்துப் பார்த்தன.
வானிலிருந்தும், கடலில் இருந்தும், கடலுக்கு அடியிலிருந்தும் (நீர்முழ்கிக் கப்பல் மூலம்) இந்தக் கப்பல் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது.
கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகும், இந்தக் கப்பல் உடனடியாக மூழ்காமல் சுமார் 12 மணிநேரம் தாக்குப்பிடித்தது. இறுதியில் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இப்பயிற்சி உண்மையான இலக்குகளின் மீது நேரடி வெடிப்பொருட்களை பயன்படுத்திப் பயிற்சி பெற வீரர்களுக்கு உதவுகிறது.
நவீன ஆயுதங்கள் ஒரு வலிமையான போர்க்கப்பலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்காணிக்கவும், எதிர்காலப் போர்க்கப்பல் வடிவமைப்புகளை மேம்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
சுருக்கமாகச் சொன்னால், 29 ஆண்டுகள் கடலில் மிதந்து நாட்டைப் பாதுகாத்த ஒரு போர்க்கப்பல், தனது இறுதிப் பயணத்தின் போதும் இராணுவப் பயிற்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டது.
ஈரான் நேற்று (2026.05.04) மேற்கொண்ட தாக்குதல்கள்
மே 4, 2026 அன்று (நேற்று), ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் தீவிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
ஈரான் அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மற்றும் வணிக ரீதியிலான எண்ணெய் டேங்கர்களை இலக்கு வைத்து க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஈரானின் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு முனையமான ஃபுஜைரா (Fujairah) துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அமீரக வான் பாதுகாப்புப் படை 12 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 3 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 4 ட்ரோன்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்தனர்.
அமீரகம் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் கப்பல்கள் இந்த நீரிணையில் தாக்குதலுக்குள்ளாகின. இதில் அமீரகத்தின் அரசுக்குச் சொந்தமான அட்நாக் (Adnoc) நிறுவனத்தின் எண்ணெய் டேங்கர் ஒன்றும் அடங்கும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இராணுவம் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி ஈரானின் ஏழு அதிவேகப் படகுகளை தாக்கி அழித்ததாக அறிவித்தார். இருப்பினும், ஈரான் இதனை மறுத்துள்ளதுடன், அமெரிக்கா இரண்டு சிறிய சரக்குக் கப்பல்களைத் தாக்கியதில் ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை அமெரிக்க இராணுவப் பாதுகாப்போடு வெளியேற்றும் Project Freedom என்ற திட்டத்தை அமெரிக்கா தொடங்கிய நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தத் தாக்குதல்களின் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்து, ஒரு பேரல் 115 டொலரைத் தாண்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Link | Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அமெரிக்க இராணுவக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பகிரப்படும் காணொளி தவறானது என்பதுடன் அது 2016-ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RIMPAC 2016) போது, பணியிலிருந்து ஓய்வுபெற்ற USS Thach (FFG 43) கப்பலை மூழ்கடிக்கும் காணொளி என்பது கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


