சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Altered சர்வதேசம் | International

சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் கைகுலுக்கிய போது, ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் ட்ரம்ப் தனது தலையைக் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

1980 ஆம் ஆண்டு அமெரிக்கா சீனாவை விட மேலோங்கி இருந்தது, ஆனால் இன்று சீனா அமெரிக்காவைவிட மேலோங்கி நிற்கிறது  என தெரிவிக்கப்பட்டு இரண்டு காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தது.

மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fb | Fb

Fact Check (உண்மை அறிவோம்)

உண்மையில் இந்த பதிவில் இரண்டு புகைப்படங்கள் காணப்படுகின்றன ஆகவே நாம் முதலில் இடது பக்கம் உள்ள புகைப்படம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். இதன்போது கருப்பு வெள்ளையில் இருந்கும் அந்த புகைப்படமானது, 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சீனத் துணைப் பிரதமர் டெங் சியாவோபிங் (Deng Xiaoping) அமெரிக்காவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. இந்த படத்தில் இடப்பக்கம் சீனத் துணைப் பிரதமர் டெங் சியாவோபிங் காண்ப்படுவதோடு, வலப்பக்கம் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காணப்படுகின்றார். Link

ஆனால் வலது பக்கம் உள்ள புகைப்படம் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அமெரிக்க ஜனாதிபதி சீன ஜனாதிபதிக்கு தலைகுனிந்து மரியாதை செய்வது போன்ற புகைப்படங்களோ காணொளிகளோ சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.

பெய்ஜிங்கில் நடந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு தொடர்பாக, ரொய்ட்டர்ஸ் மற்றும் பிற சர்வதேச ஊடகங்களால் வெளியிடப்பட்ட பொதுவெளியில் கிடைக்கக்கூடிய வீடியோ காட்சிகள், ட்ரம்ப் மற்றும் ஷி ஆகிய இரு தலைவர்களும் Great Hall of the People கட்டிடத்திற்கு வெளியே ஒருவருக்கொருவர் சாதாரணமான முறையில் கைகுலுக்கி வரவேற்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த வீடியோ காட்சிகளில் ட்ரம்ப், ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் தனது தலையைக் குனிந்து வணங்கும் எந்தவொரு பகுதியும் இடம்பெறவில்லை.

மேற்குறிப்பிட்ட இந்த காணொளியின் காட்சிகள் இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. கைகுலுக்கும் போது இரு தலைவர்களும் நிமிர்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள், சிறிது நேரம் கேமராக்களுக்கு முன் நின்றுவிட்டு, பின்னர் ஒன்றாக அந்த இடத்திற்குள் நடந்து செல்கிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்ற மிகைப்படுத்தப்பட்ட தலைகுனிந்த நிலை (வணங்குவது போன்ற நிலை) இந்த வீடியோவின் எந்தவொரு பகுதியிலும் இடம் பெறவில்லை. 

பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படங்களும், இரு தலைவர்களும் கைகுலுக்கி வரவேற்ற போது நிமிர்ந்த நிலையிலேயே இருந்ததை அவ்வாறே காட்டுகின்றன. 

மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படத்தையும் உண்மையான காணொளியில் உள்ள காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அந்தப் படம் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது (எடிட் செய்யப்பட்டுள்ளது) என்பது தெளிவாகிறது. உதாரணமாக, படத்தில் உள்ள கைகுலுக்கலின் கோணம் , உண்மையான நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காணொளியின் காட்சிகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதனை காணமுடிகின்றது.

இந்த உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட உண்மையான கைகுலுக்கல் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மாற்றியமைக்கப்பட்ட படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை அவதானிக்க முடிகின்றது.  ட்ரம்ப் குனிந்து வணங்குவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அவரது உடலின் மேல் பகுதி மாத்திரம் டிஜிட்டல் முறையில் கீழ்நோக்கி வளைக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டுள்ளது.

பல சர்வதேச ஊடகங்களின் பெய்ஜிங் உச்சிமாநாடு பற்றிய செய்திகள், இந்த கைகுலுக்கலை சுமுகமானது என்றும், வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே நிலவும் இக்கட்டான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள ஒரு தற்காலிக முன்னேற்றத்தின் அடையாளம் என்றும் விவரித்தன. ஆனால் ட்ரம்ப், ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் குனிந்து வணங்கியதாக எந்தவொரு ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. BBC, The Guardian 

தி சன் ஊடகம் இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் உடல் மொழி குறித்து விவாதித்தது,  குறிப்பாக ட்ரம்பின் முந்தைய தூதரக சந்திப்புகளுடன் ஒப்பிடும்போது, இதில் அவரது நடத்தை வழக்கத்திற்கு மாறாக மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்ததைக் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், இந்த விவாதங்கள் அனைத்தும் அவர்களின் உடல் தோரணை, கைகுலுக்கும் முறை மற்றும் நெறிமுறைகள் சார்ந்ததாக இருந்ததே தவிர, உண்மையில்  குனிந்து வணங்கியதைக் குறிக்கவில்லை.

ட்ரம்பின் பெய்ஜிங் பயணத்திலிருந்து வெளிவந்த ஒரே தவறான தகவல் இதுமட்டுமல்ல. உத்தியோகபூர்வ விருந்தின் போது, ஷி ஜின்பிங்கின் தனிப்பட்ட குறிப்புகளை ட்ரம்ப் “உளவு பார்த்தார்” என்று மற்றொரு வைரல் வீடியோ கிளிப் தவறாகக் கூறியது. ஆனால், முழுமையான வீடியோ காட்சிகளைப் பார்த்தபோது, அந்த கோப்பு உண்மையில் ட்ரம்பிற்குச் சொந்தமானது என்பது பின்னர் தெரியவந்தது. Link

முக்கியமான புவிசார் அரசியல் நிகழ்வுகளின் போது, எடிட் செய்யப்பட்ட படங்கள், வெட்டப்பட்ட வீடியோக்கள் மற்றும் தவறான தலைப்புகள் எவ்வாறு இணையத்தில் மிக வேகமாகப் பரவக்கூடும் என்பதை இந்தச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில், பெய்ஜிங்கில் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பின் போது, டொனால்ட் ட்ரம்ப் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் குனிந்து வணங்குவது போல் காட்டும் புகைப்படம், அந்த நிகழ்வின் உண்மையான காணொளி காட்சிகளுடன் ஒத்துப்போகவில்லை. பொதுவெளியில் உள்ள காணொளிகள் மற்றும் பத்திரிகை புகைப்படங்கள், இரு தலைவர்களும் நிமிர்ந்த நிலையில் சாதாரண தூதரக முறைப்படி கைகுலுக்கிக் கொண்டதையே காட்டுகின்றன. எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படத்தில் ட்ரம்பின் உடல் தோரணையை மாற்றுவதற்காக, அது டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Suji Shabeedharan

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *