
ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

எங்களால் இப்படித் தொடர முடியாது.. 12 மாலிமா எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் மூலம் அறிவிப்பு. என தெரிவித்து குறித்த பதிவானது 2026.04.20 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இவ்வாறு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு கட்சியில் தொடரமுடியாது என கடிதங்களை அனுப்பியிருந்தால், அது பிரதான ஊடகங்களில் ஒரு முக்கிய செய்தியாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதுடன், பிரதான ஊடகங்கள் வாயிலாக அது தொடர்பில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதற்கமைய, இவ்வாறான ஒரு செய்தி தொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என்பது குறித்து நாம் முதற்கட்டமாக ஆராய்ந்த போதிலும், இது தொடர்பான எந்தவொரு செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.
அதேபோன்று, அத்தகைய கடிதங்களை கையளித்தல் அல்லது பதவி விலகுவதற்கான தயார்நிலை குறித்து ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்தியோகபூர்வ ஆதாரங்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால், இது தொடர்பில் உறுதிப்படுத்தக்கூடிய சம்பந்தப்பட்ட தரப்பினரை நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
ஆளுங்கட்சியின் 12 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து விலகும் தயார்நிலையில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் இது தொடர்பில் வினவினோம். இதன்போது, இது முற்றிலும் போலியான ஒரு தகவல் எனவும், அவ்வாறு அமைச்சர்கள் பதவி விலகும் எந்தவொரு தயார்நிலையும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையகம்
இது தொடர்பில் மேலும் உறுதிப்படுத்துவதற்காக, பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி தலைமையக ஊடகப் பிரிவிடமும் நாம் வினவினோம். இதன்போதும், இது முற்றிலும் போலியான தகவல் என்பதனை அவர்களும் எமக்கு உறுதிப்படுத்தினர்.
இதுவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில், பல்வேறு காரணங்களுக்காக ஒரு சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகிய சம்பவங்கள் இதற்கு முன்னர் பதிவாகியிருந்தன.
சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக ரன்வல, 2024 டிசம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததுடன், அவரது கலாநிதிப் பட்டத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து சமூகத்தில் எழுந்த கடும் சர்ச்சை மற்றும் கேள்விகளுக்கு மத்தியிலேயே அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.Link | Link
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக இருந்த கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, 2025 ஜூன் 20 அன்று தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் பிரதி அமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்ததுடன், அதன் பின்னர் அவர் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். Link | Link
2026 ஏப்ரல் 17 ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததுடன், நிலக்கரி இறக்குமதி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு இடமளிக்கும் வகையில் அவர் இந்த இராஜினாமாவைச் செய்திருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பதவியை இராஜினாமா செய்த முதலாவதும் ஒரேயொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இவராவார். எரிசக்தி அமைச்சரின் பதவி விலகலைத் தொடர்ந்து, அந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், 2026 ஏப்ரல் 17 ஆம் திகதியன்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபாலவும் தனது செயலாளர் பதவியிலிருந்து விலகியிருந்தார். Link | Link
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, எங்களால் இப்படி தொடர முடியாது என தெரிவித்து 12 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதங்களை கையளித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அந்த தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை ஜனாதிபதி ஊடகப் பிரிவும், பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


