
INTRO :
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் திறப்பு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ‘சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இன்று திறப்பு! – இலங்கையின் மருத்துவக் கல்வியில் வரலாற்று மைல்கல்.-https://malayagam.lk/40081 ’ என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (04.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த பதிவில் இருந்த இணைய இணைப்பினை சென்று பார்வையிட்டபோது அதில், சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் திறப்பு என்று தலைப்பீட்டு சரியான செய்தியினை பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
2018 வரவுசெலவுத் திட்டம் (Budget 2018):
நாட்டின் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் சப்ரகமுவ, வயம்ப மற்றும் மொரட்டுவ மருத்துவ பீடங்களுக்காக 1,250 மில்லியன் ரூபாய் (1.25 பில்லியன்) நேரடி நிதி ஒதுக்கீடு 2018 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் செய்யப்பட்டது.

அமைச்சரவை தீர்மானம் – 2018:
2018 மார்ச் மாதம் 06 ஆம் திகதியன்று அமைச்சரவை அலுவலகத்தினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, சப்ரகமுவ மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்காக முதற்கட்டமாக 75 மாணவர்கள் கொண்ட குழுவை இணைத்துக்கொண்டு கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது.
நிரந்தர கட்டிடங்கள் கட்டப்படும் வரை, மாணவர்களின் விரிவுரை மற்றும் தங்குமிட வசதிகளுக்காக இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் பதுஹேன பகுதியில் உள்ள தற்காலிக வளாகம் மற்றும் தணிக்கவாளர் திணைக்களத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் கட்டிடத் தொகுதி ஆகியவற்றை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தல் (2018):
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 27(1) பிரிவின் கீழ், உயர்கல்வி அமைச்சரின் கையொப்பத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் (Faculty of Medicine) அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

முதலாவது மாணவர் குழு சேர்க்கை மற்றும் திறப்பு விழா (ஜனவரி 2019):
2019 ஜனவரி 17 அன்று, அப்போதைய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதன்போது 75 மாணவர்களைக் கொண்ட முதலாவது குழு (2017/2018 கல்வியாண்டு) இணைத்துக் கொள்ளப்பட்டது. நிரந்தர கட்டிடம் இல்லாததால், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையுடன் இணைந்த தற்காலிக வளாகங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளங்களைப் பயன்படுத்தி விரிவுரைகள் நடத்தப்பட்டன. Link 1 | Link 2
முக்கிய குறிப்பு:
2019 இல் இடம்பெற்றது,மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது மாத்திரமேயன்றி, நிரந்தர கட்டிடத் தொகுதி ஒன்றினை மாணவர் பாவனைக்கு கையளிப்பது அல்ல. அக்காலப்பகுதியில் நிரந்தர கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவில்லை, தற்காலிக வசதிகளின் கீழேயே விரிவுரைகள் நடத்தப்பட்டன.
சவூதி அபிவிருத்தி நிதியத்துடனான அதிகாரப்பூர்வ கடன் ஒப்பந்தம் (செப்டம்பர் 2019):
மருத்துவ பீடத்திற்கான நவீன பௌதீக வளாகத்தை நிர்மாணிப்பதற்காக 2019 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் சவூதி அரசாங்கத்திற்கும் இடையில் அதிகாரப்பூர்வ நிதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 187.5 மில்லியன் சவூதி ரியால் (சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர்) சலுகைக் கடன் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (SFD) மூலம் வழங்கப்பட்டதுடன், மீதித் தொகையை இலங்கை அரசாங்கம் ஏற்க ஒப்புக்கொண்டது.
பல அரசாங்கங்களின் கீழ் தொடர்ந்த திட்டம் (Para-Clinical மற்றும் நிர்வாக கட்டிடங்கள்):
நிர்வாக மற்றும் கிளினிக்கல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா 2020 அக்டோபரில் (அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ்) இரத்தினபுரி, நவநகர, கல்கடுவவத்த வளாகத்தில் நடைபெற்றது.
முந்தைய திட்டத்தின்படி, இந்த கட்டிடத் தொகுதி முதற்கட்டமாக ஒன்றரை (1.5) வருட குறுகிய காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் 2020 கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானப் பணிகள் கணிசமாக தாமதமடைந்தன.
2019 ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் சப்ரகமுவ மருத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளே முதன்முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டன (தற்காலிக கட்டிடங்களில்). தற்போது 2026 ஜூலையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் திறந்து வைக்கப்பட்டது, பல அரசாங்கங்களின் கீழ் கட்டப்பட்டு நிறைவடைந்த அதன் புதிய நிரந்தர மருத்துவ பீட கட்டிடத் தொகுதி (Para-Clinical Building) ஆகும்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த
இது குறித்து மேலும் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு அண்மைக்காலம் வரை இருமுறை அதன் துணைவேந்தராகப் பணியாற்றிய, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த அவர்களிடம் நாம் வினவினோம். அப்போது அவர் பின்வரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்:
“சப்ரகமுவ மருத்துவப் பீடம் 2019 ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் எமது பணிகளைத் தொடங்குவதற்காக படுஹேன என்ற இடத்தில் அமைந்துள்ள கணக்காய்வாளர் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடத் தொகுதியே எமக்கு வழங்கப்பட்டது. அங்கு மூன்று திணைக்களங்கள் இயங்கி வந்தன. பொதுவாக ஒரு மருத்துவ மாணவர் உள்வாங்கப்படும் போது, Pre-clinical படிப்பிற்காக இரண்டு ஆண்டுகள் அங்கு இருக்க வேண்டும். அதன் பின்னரே Para-clinical படிப்பிற்குச் செல்வார்கள். அந்த Para-clinical கட்டடத்தின் பணிகள் 2020 அக்டோபர் அளவில், எனது நினைவின்படி அக்டோபர் 30 அன்று ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக திறைசேரியிலிருந்து 96 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அமைச்சரவையின் அனுமதியுடன் அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படும் போது நான் துணைவேந்தராக (VC) இருந்தேன். பணிகள் நடந்து கொண்டிருந்த போது, கொவிட் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானப் பணிகள் தாமதமடைந்தன.
2019 இல் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 70 மாணவர்கள், தங்களது இரண்டு வருடப் படிப்பை முடித்துக்கொண்டு இங்கு வரும்போது, ஏற்பட்ட தாமதம் காரணமாக அவர்களைத் தங்க வைப்பதற்கு எமக்கு இடம் இல்லாமல் போனது. அதன் பின்னர், இரத்தினபுரி புதிய நகரில் உள்ள விசேட பயிற்சி மையத்தின் சில அறைகளில் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதனைத் தொடர்வது கடினமாக இருந்தது.
முன்களினிக்கல் பிரிவில் 3 திணைக்களங்களும், பராக்ளினிக்கல் பிரிவில் 7 திணைக்களங்களும் என மொத்தம் 15 திணைக்களங்கள் உள்ளன. இந்தக் கட்டடப் பிரச்சினை காரணமாக, இரத்தினபுரி புதிய நகரில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கட்டடம் ஒன்று வாடகை அடிப்படையில் பெறப்பட்டது. 2022 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் நிலுவைப்பணம் செலுத்தப்படாத காரணத்தினால், இதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ‘மாகா’ (MAGA) நிறுவனம் பணிகளை நிறுத்த முற்பட்டது. அதன் பின்னர் நான் அன்றைய ஜனாதிபதியுடன் (அவர் அப்போது நிதியமைச்சராகவும் இருந்தார்) பேசினேன். ஐந்து தொகுதி (Batches) மாணவர்கள் இருக்கின்றார்கள், பணம் செலுத்தப்படாததால் பராக்ளினிக்கல் கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறினேன். அதன்பின்னர், ஒப்பந்ததாரருக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சுக்கு 300 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டது. அவ்வாறுதான் அந்தப் பணிகள் தொடர்ந்தன.
பின்னர் 2024 இல், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அவர்கள் வருகை தந்து, பராக்ளினிக்கல் கட்டடத்தை (நீல நிறக் கூரையைக் கொண்ட 3-4 மாடி கட்டடங்கள் இரண்டு) திறந்து வைத்தார். அதன் பின்னர், நாம் வாடகைக்கு எடுத்திருந்த கட்டடத்தை ஒப்படைத்துவிட்டோம்.Link
தற்போது மருத்துவப் பீடத்தில் சுமார் 700 மாணவர்கள் பயில்கின்றனர். இரண்டு தொகுதிகள் (Batches) படிப்பை முடித்து வெளியேறியுள்ளன. ஊடகங்கள் இங்கு குழப்பிக்கொண்ட விஷயம் என்னவென்றால், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ‘மருத்துவப் பீடம் திறப்பு விழா’ என்பதாகும். அது தவறானது. மருத்துவப் பீடம் ஏற்கனவே திறந்து முடிக்கப்பட்டுவிட்டது. உத்தியோகபூர்வ ஆரம்ப விழா (Ceremonial opening) ஒரு முறை மட்டுமே நடத்தப்படும்.
கடந்த நாட்களில் நடைபெற்றது கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வே ஆகும். இந்தத் திறக்கப்பட்ட கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகள் சவூதி நிதியுதவியின் கீழ் 2024 ஜனவரியில் தான் ஆரம்பிக்கப்பட்டன. அதாவது விடுதிகள், மண்டபம், நூலகம் மற்றும் பேராசிரியர் பிரிவு (Professorial Unit) என்பனவாகும். பேராசிரியர் பிரிவு இன்னும் திறக்கப்படவில்லை, அதன் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதமே நிறைவடையவுள்ளன.
2019 இல் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் கடன் ஒப்பந்தத்திற்கு, கொவிட் மற்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் காரணமாக நீண்ட காலம் எடுத்தது. சவூதி நிதிய நிறுவனம் அதனை நிறுத்தவும் முற்பட்டது. பின்னர் நான் 2019 ஆகஸ்ட் – செப்டம்பர் காலப்பகுதியில், அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்குக் கடிதம் எழுதி இதன் அவசியத்தை விளக்கினேன். அதன்பின் 2019 ஏப்ரலில் முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பின்னர் கொழும்பில் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே இது நடைமுறைக்கு வந்தது. 2024 ஜனவரியில்தான் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாகப் பெரிய விளம்பரங்கள் ஏதுமின்றி பணிகள் தொடங்கின. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் புதிய கட்டுமானங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை, பழைய ஒப்பந்தமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பீடத்தை ஆரம்பிப்பதற்கான முதல் கடிதத்தை எழுதியவனும் நான்தான். எனவே, ஊடகங்கள் ‘கட்டடங்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், ‘மருத்துவப் பீடம் திறக்கப்பட்டது’ எனக் கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தின. கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் நாம் இப்பணிகளை மேற்கொண்டோம். ‘மாகா’ நிறுவனம் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியாவிலிருந்து கூட பணியாளர்களை வரவழைத்தது. இது சப்ரகமுவ மாகாணத்திற்கு ஒரு பெரிய ஆசீர்வாதமாகும்.”
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் திறப்பு என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

