
கடந்த ஜூலை 05 மற்றும் 06, ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வன்முறை, நாட்டின் மிக மோசமான சிறைச்சாலை சம்பவங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் என ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமையை காணமுடிந்தது.
எனவே அந்த புகைப்பட்டம் மீட்கப்பட்ட ஆய்தங்களின் படமா என்பது தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் சிறைச்சாலைக்குள் இவ்வாறான பொருட்கள் எவ்வாறு சென்றடைந்தன?**
சிறைச்சாலைக்கு ஒருவர் அழைத்துச் செல்லப்படும் போது, மிகவும் கடுமையான மற்றும் அநாகரீகமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
அப்படிப்பட்ட மிகத் தீவிரமான உடல் பரிசோதனைகளையும் தாண்டி, இவ்வாறான தடைசெய்யப்பட்ட பொருட்கள் அவர்களுக்குள் எவ்வாறு சென்றடைந்தன?
இங்குதான் மிகப்பெரிய கேள்விக்குறி எழுகிறது!
யார் மீது தவறு இருக்கிறது என்பதைத் தேடுவதை விட, இந்த சட்டவிரோத பொருட்கள் சிறைச்சாலைக்குள் எவ்வாறு ஊடுருவின என்பது குறித்துதான் முதன்முதலில் மிகத் தீவிரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். என தெரிவிக்கப்பட்டு நேற்று (2026.07.13) சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் குறித்த விசாரணைகளின் போது, கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளைத் தாக்குவதற்கு பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூரிய ஆயுதங்கள் பெருமளவில் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 1,000-க்கும் மேற்பட்ட மரத்தாலான தடிகளும் அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும், மேலும், கைதிகள் சிறைச்சாலை சமையலறைக்குள் நுழைந்து அங்கிருந்த தேங்காய்களையும் எடுத்து வந்து அதிகாரிகளைத் தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை எமது ஆய்வின் மூலம் அறியமுடிந்தது.
மேலும் அந்த செய்திகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும், சிறைச்சாலையின் உட்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகளும், பெருமளவிலான கூரிய ஆயுதங்கள் மற்றும் இரும்புத் தண்டுகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோதலின் போது கைதிகள் சிறைச்சாலை சமையலறையை உடைத்து அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், சமையலறையில் இருந்த தேங்காய்களை எடுத்து வந்து அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Link | Link
ஊடகங்களில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் காட்சிகள் வெளியாகியிருந்த போதிலும் மேற்குறிப்பிட்ட விதத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த புகைப்பட்டம் வெளியாகியிருக்கவில்லை.
உண்மையில் சிறைச்சாலையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் காட்சிகள் அடங்கிய காணொளி பின்வருமாறு
மேலும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அதிகாரிகளை தாக்குவதற்கு கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் என குறிப்பிட்டு இந்த ஆயுதங்களின் காணொளி பகிரப்பட்டிருந்தது. அந்த பதிவுகளில் இந்த ஆயுதங்கள் எவ்வாறு சிறைக்குள் வந்தது என குறிப்பிட்டிருந்தமையையும் காணமுடிந்தது.
ஆனால் இந்த செய்தி காணொளிகளில் இருக்கும் ஆயுதங்களுக்கும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் பதிவிட்ட ஆயுதங்களும் முற்றிலும் மாறுப்பட்டவையாக காணப்படுவதனால் நாம் அந்த புகைப்படத்தினை AI Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த ஆயுதங்களின் படம் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

நீர்கொழும்பு சிறைச்சாலை
எனினும் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக நாம் நீர்கொழும்பு சிறைச்சாலையை தொடர்புகொண்டு வினவியபோது, இப்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்திற்கு கொண்டு அது சம்பந்தமாக எந்த பதில்களையும் வழங்க முடியாது என நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
மேலும் அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடமபெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த மோதலை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை எனவும், சிறைச்சாலை கட்டமைப்பை சீர்குலைப்பதே மோதலில் ஈடுபட்டவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளானது ஆயுதமற்ற இரு அதிகாரிகள் என்றும், அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே ஏனைய அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்றதாகவும், பெரும்பாலான அதிகாரிகள் செங்கற்கள் மற்றும் கம்புகளால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இருப்பினும், நடந்த தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், என்ன காரணத்திற்காக இந்தப் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஆயுதங்கள் மீட்டகப்பட்டதாக பல பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் சமூக ஊடகங்களில் குறித்த ஆயுதங்கள் என பகிரப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் ஊருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு – ஃபேக்ட் கிரஸண்டோ இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் குறித்த ஆயுதங்கள் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக அந்த ஆயுதங்களின் காட்சிகளுடன் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அது குறித்த உண்மையான தகவல்கள் எமக்கு உரிய அதிகாரிகளிடமிருந்து கிடைக்காதமையினால், இந்த ஆயுதங்கள் சிறைக்குள் எப்படி வந்தது சிறைச்சாலை சமையலறையில் இருந்து தான் கைதிகள் உண்மையில் இந்த ஆயுதங்களை பெற்றுக்கொண்டார்களா என்பது தொடர்பில் எந்தவொரு இறுதி முடிவுகளையும் நாம் வழங்கவில்லை. நாம் இந்த ஆய்வினை குறித்த புகைப்படம் உண்மையா அல்லது போலியானதா என்பது தொடர்பில் மாத்திரமே மேற்கொண்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

