
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது — கடந்த அறுபது ஆண்டுகால திமுக – அதிமுக ஆகிய இருமுனை அரசியல் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி நிகழ்ந்த முதல் ஆட்சி மாற்றம் இதுவாகும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு, இந்த தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பையும் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
தமிழ்நாடும் இலங்கையும் தங்களுக்குள் ஆழமான டிஜிட்டல் தகவல் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டின் 7.7 கோடி தமிழர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் குழுக்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் ஆகியவை இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் சமூக ஊடக வழிமுறைகளில் பெருமளவில் ஒத்துப்போகின்றன. இதன் விளைவாக, 2026 ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில பரவிய போலி தகவல்கள், எந்தவொரு எச்சரிக்கை அறிவிப்புகளோ, பின்னணியோ அல்லது திருத்தமோ இன்றி சில மணிநேரங்களிலேயே கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களைச் சென்றடைந்தன.
இந்த எல்லை கடந்த தகவல் பரிமாற்றத்திற்கு அப்பால், அரசியல் முக்கியத்துவம் சார்ந்த ஒரு கேள்வியும் இதில் உள்ளது. விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) எழுச்சியும், அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு புதிய அரசியல் ஆளுமையை முன்னிறுத்துகிறது, இலங்கைத் தமிழர்களின் உரிமைகள், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரந்த தமிழ் அரசியல் அபிலாஷைகள் குறித்த அவரது நிலைப்பாடு இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. இந்த உறவுமுறை எவ்வாறு வளர்கிறது என்பது இலங்கைத் தமிழர்களை நேரடியாகப் பாதிக்கும் விடயமாகும்.
இந்த கட்டுரையானது, ‘ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கை’ (Fact Crescendo Sri Lanka) அமைப்பால் நடத்தப்பட்ட சரிபார்க்கப்பட்ட உண்மைச் சோதனைகளைத் தொகுத்து, இந்தத் தேர்தலை வழிநடத்திய முக்கிய போலி பரப்புரை உத்திகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கையும் மீண்டும் ஆராய்வதல்ல, மாறாக அதன் பின்னணியில் உள்ள வடிவங்களையும் உத்திகளையும் கண்டறிவதே ஆகும். இதன் மூலம் இலங்கை ஊடக நுகர்வோரும் உண்மைச் சரிபார்ப்பாளர்களும் அடுத்த முறை இத்தகை போலி தகவல்கள் பரவும் போது அவற்றை எளிதில் அடையாளம் காண முடியும்.
தேர்தல் முடிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?
23 ஏப்ரல் 2026 அன்று, தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 85.1% என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு பதிவானது. மே மாதத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, நடிகரிலிருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது — இது 1967 முதல் தமிழ்நாடு அரசியலைத் தீர்மானித்து வந்த திமுக-அதிமுகவின் மாறிமாறி வரும் ஆதிக்கத்தை உடைத்தெறிந்தது.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், TVK கட்சிக்கு காங்கிரஸ் (5 இடங்கள்), சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தலா 2 இடங்கள்) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன.
இதன் மூலம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன், சி. ஜோசப் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக மே 10, 2026 அன்று பதவியேற்றார்.
இது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக நீடித்த இருமுனை அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியாகும் — மேலும் இது தமிழ்நாட்டின் டிஜிட்டல் ஊடக வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகத் தீவிரமான மற்றும் திட்டமிடப்பட்ட போலிப் பரப்புரை பிரச்சாரங்களுக்கும் வழிகவகுத்தது என்றே கூற வேண்டும்..
ஐந்து போலி பரப்புரை உத்திகள்
தேர்தல் காலம் முழுவதும் — பிரச்சாரம், வாக்குப்பதிவு நாள் மற்றும் முடிவுகளுக்குப் பிந்தைய அரசு உருவாக்கம் வரை — பரவிய போலி தகவல்கள் தற்செயலானவை அல்ல. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மூலோபாய இலக்கைக் கொண்டு, ஐந்து வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பரப்பப்பட்டன:
| போலி பரப்புரை வடிவம் | மூலோபாய இலக்கு | கால அளவு |
| 1. புதிய வருகை, சவால் மிக்கவரை தகுதியிழக்கச் செய்தல் | விஜய்/தவெக மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையையோ அல்லது குழப்பத்தையோ ஏற்படுத்துதல் | தேர்தலுக்கு முன் |
| 2. ஆளுங்கட்சியைத் தகுதியிழக்கச் செய்தல் | மிகைப்படுத்தப்பட்ட அல்லது புனையப்பட்ட ஊழல் முறைப்பாடுகள் மூலம் திமுக/ஸ்டாலினின் நம்பகத்தன்மையைக் கெடுத்தல் | தேர்தலுக்கு முன் |
| 3. பொதுவான கருத்தொற்றுமையை போலியாக உருவாக்குதல் | போலி கருத்துக்கணிப்புகள் மற்றும் ஊடக அறிக்கைகள் மூலம் ஒரு குறிப்பிட்ட கட்சி தான் வெல்லும் என்ற போலி பிம்பத்தை உருவாக்குதல் | தேர்தலுக்கு முன்பும் வாக்குப்பதிவு நாளிலும் |
| 4. பிரபலங்களின் செல்வாக்கை ஆயுதமாக்குதல் | நடிகர்களின் உண்மையான அல்லது புனையப்பட்ட அறிக்கைகளைப் பொதுமக்களின் ஆதரவுக்கான சான்றாகப் பயன்படுத்துதல் | தேர்தல் காலம் முழுவதும் |
| 5. தேர்தல் முடிவை மாற்றி எழுத முயலுதல் | புதிய ஆட்சி சட்டவிரோதமானது என்பதைக் காட்ட பழைய காணொளிகளை (வீடியோக்களை) மாற்றிப் பயன்படுத்துதல் | தேர்தலுக்குப் பின் |
பிரிவு 1 — தேர்தலுக்கு முன்
சவாலாளரைத் தகுதியிழக்கச் செய்தல்: விஜய் மற்றும் தவெக
திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு உண்மையான தேர்தல் சவாலாக தவெக உருவெடுத்ததால், விஜய்யின் நம்பகத்தன்மை மற்றும் அவரது பிரச்சார உரைகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டன. புதிய அரசியல்வாதி ஒரு குழப்பவாதி, நிலையற்றவர் (தற்குறி என்ற வார்த்தையை தவெகினரை அடையாளப்படுத்த பிரபலப்படுத்துதல்) அல்லது ரகசியமாகத் தனது எதிரிகளுடன் கைகோர்த்துள்ளார் என்ற எண்ணத்தை உருவாக்குவதே இதன் தெளிவான இலக்காகு ம்.
விஜய்யின் பிரச்சாரச் சின்னம் மாற்றப்பட்டது
- தவறான தகவல்: விஜய் தனது பிரச்சாரத்தின் போது திமுகவின் சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பது போன்ற எடிட் செய்யப்பட்ட காணொளி பரவியது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: விஜய் தேர்தல் முழுவதும் தவெகவின் சொந்த சின்னமான ‘விசில்’ சின்னத்திற்கே தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அந்த காணொளியில் ‘விசில்’ என்று அவர் குறிப்பிட்ட பகுதி டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ‘உதயசூரியன்’ எனச் செருகப்பட்டிருந்தது.
- ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
இலங்கைக்கு இது ஏன் முக்கியம்?
இலங்கையில் நிறுவப்பட்ட பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்குப் சவாலாக ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகும் போது, இதே போன்ற உத்திகளை எதிர்பார்க்கலாம்: அவர்களின் வாக்காளர் தளத்தைக் குழப்புவதற்காக எடிட் செய்யப்பட்ட உரைகள், மாற்றப்பட்ட காட்சிகள் மற்றும் போலியான கூட்டணிகள் உருவாக்கப்படும். இந்த எடிட்டிங் மிகவும் நுணுக்கமாக இருந்ததால் சாதாரண பார்வையில் உண்மையானது போலத் தோன்றும். எனவே, வேட்பாளர்களின் பிரச்சாரத் தகவல்களை எப்போதும் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.
பிரிவு 2 — தேர்தலுக்கு முன்
ஆளுங்கட்சியைத் தகுதியிழக்கச் செய்தல்: ஸ்டாலின் மற்றும் திமுகவை இலக்கு வைத்தல்
விஜய் மீதான தாக்குதல்களுக்கு இணையாக, பதவியிலிருந்த திமுக அரசைக் குறிவைத்து மற்றொரு பொய்த் தகவல் அலையும் பரவியது — ஊழல் கதைகளை மிகைப்படுத்துதல், அறிக்கைகளைத் தவறாகச் சித்தரித்தல் மற்றும் மத ரீதியான சர்ச்சைகளை உருவாக்குதல் போன்ற உத்திகள் இதில் பயன்படுத்தப்பட்டன. இது திமுகவை எதிர்க்க நினைப்பவர்களுக்கும், யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காதவர்களுக்கும் ஒருசேர வலைவீசுவதாக அமைந்தது.
ஸ்டாலினின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 450 மடங்கு மிகைப்படுத்தப்பட்டது
- தவறான தகவல்: “நான் தோற்றால், எனது 3,000 கோடி ரூபாய் சொத்துக்களைப் பொதுமக்களுக்குத் தானமாக வழங்குவேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விட்டதாக ஒரு போலி நியூஸ் News Card பரவியது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ தேர்தல் சொத்து மதிப்புப் பத்திரத்தின்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 6.62 கோடியாகும் (இந்திய மதிப்பு). இந்த போலிச் செய்தி அவரது சொத்தை 450 மடங்கு அதிகமாகக் காட்டியதோடு, அவர் கூறாத ஒரு சவாலையும் போலியாக உருவாக்கியிருந்தது.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
ஸ்டாலினும் திருப்பரங்குன்றம் கோயில் சர்ச்சையும்
- தவறான தகவல்: “திமுக ஆட்சியில் இருக்கும் வரை திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்ற அனுமதிக்க மாட்டோம்” என்று ஸ்டாலின் கூறியதாக எடிட் செய்யப்பட்ட காணொளி பரப்பப்பட்டது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: இந்த காணொளி டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டது. ஸ்டாலின் அப்படி எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான பழைய செய்தி ஒன்றைக் கத்தரித்து, வாக்குப்பதிவுக்கு முன்னதாக மதரீதியான தூண்டுதலை உருவாக்க இவ்வாறு இணைத்திருந்தனர்.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
இலங்கைக்கு இது ஏன் முக்கியம்?
சொத்துக்களை மிகைப்படுத்திக் காட்டுவது மற்றும் மத ரீதியான சர்ச்சைகளை உருவாக்குவது ஆகிய இரு உத்திகளும் தெற்காசிய அரசியல் போலி பரப்புரைகளில் மிக எளிதாகப் பயன்படுத்தப்படும் உத்திகளாகும். மதம், இனம் மற்றும் அரசியல் ஊழல் பற்றிய பார்வைகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை அரசியல் சூழல், இத்தகைய பொய்களுக்கு எளிதில் பலியாகக்கூடியது. வாசகர்கள் எப்போதும் சொத்து விபரங்களை அதிகாரப்பூர்வ பிரகடனங்களுடன் ஒப்பிட வேண்டும், மேலும் தேர்தல் காலங்களில் வரும் மதச் சர்ச்சை காணொளிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.
பிரிவு 3 — தேர்தலுக்கு முன்பும் வாக்குப்பதிவு நாளிலும்
பொதுவான கருத்தொற்றுமையை போலியாக உருவாக்குதல்: போலி கருத்துக்கணிப்புகளும் ஊடகங்களும்
சன் நியூஸ், இந்தியா டுடே, பாலிமர் டிவி, ஐபிசி தமிழ் போன்ற முன்னணி ஊடகங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான கருத்துக்கணிப்புகளையும் வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களையும் வெளியிடும் அதிநவீன போலிச் செய்தி கும்பல் ஒன்று செயல்பட்டது. இதன் மூலோபாய நோக்கம் என்னவென்றால்: ‘நம்பகமான’ ஊடகங்கள் இன்னார்தான் வெல்லப் போகிறார்கள் என்று கூறும்போது, இன்னும் முடிவெடுக்காத வாக்காளர்கள் அந்தப் பக்கமே சாய்வார்கள், மேலும் மற்ற கட்சிகளின் ஆதரவாளர்கள் தங்களின் வாக்கு வீணாகிவிடும் என்றெண்ணி வாக்களிக்க வராமல் போகலாம் என்பதாகும்.
92% அரசு ஊழியர்கள் அதிமுகவுக்கு வாக்களித்தனர்
- தவறான தகவல்: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டின் 92% அரசு ஊழியர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளனர்” என்று சன் நியூஸ் மற்றும் பாலிமர் டிவியின் பெயரில் போலி நியூஸ் கார்ட்கள் பரவின.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: சன் நியூஸ் அல்லது பாலிமர் டிவி போன்ற எந்தவொரு நிறுவனமும் இத்தகைய கருத்துக்கணிப்பை வெளியிடவில்லை. எந்தவொரு நம்பகமான கணிப்பிலும் இந்த விபரம் வரவில்லை. அந்த போலி நியூஸ் கார்ட்கள் உண்மையான ஊடகங்களின் எழுத்து வடிவத்தை (Typography) லேசாக மாற்றி, அதே லோகோ மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தன.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
இந்தியா டுடே மற்றும் ஐபிசி தமிழின் பெயரிலான போலி கணிப்புகள்
- தவறான தகவல்: திமுக 160-200 இடங்களை வெல்லும் என்றும், நாம் தமிழர் கட்சிமுக்கிய எதிர்க்கட்சியாக வரும் என்றும் இந்தியா டுடே மற்றும் ஐபிசி தமிழ் கூறியதாக போலி நியூஸ் கார்டுகள் பரவின.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: இந்த இரு ஊடகங்களும் இத்தகைய கணிப்புகளை வெளியிடவில்லை. அந்த கார்டுகள் போலியானவை. ஐபிசி தமிழின் உண்மையான கருத்துக்கணிப்பு முடிவுகள் முற்றிலும் வேறானவையாக இருந்தன.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
இலங்கைக்கு இது ஏன் முக்கியம்?
ஊடகங்களின் அடையாளங்களைத் திருடிப் போலியாகச் செய்திகளைப் பரப்புவது தற்போது தெற்காசியா முழுவதும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இலங்கையின் முன்னணி ஊடகங்களான ஹிரு, தெரண, நியூஸ்ஃபர்ஸ்ட், டெய்லி மிரர், வீரகேசரி போன்ற நிறுவனங்கள் தங்களின் லோகோக்கள் மற்றும் நியூஸ் கார்ட் வடிவமைப்புகள் எவ்வாறு போலியாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ந்து, போலிச் செய்திகளுக்கு எதிரான விழிப்புணர்வை வெளியிட வேண்டும்.
வசகர்களே: ஒரு முக்கிய ஊடகத்தின் பெயரில் அதிர்ச்சிகரமான செய்தி வந்தால், உடனே அந்த ஊடகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கத்திற்குச் சென்று அது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிரிவு 4 — தேர்தல் காலம் முழுவதும்
பிரபலங்களின் செல்வாக்கை ஆயுதமாக்குதல்: புனையப்பட்ட நடிகர் அறிக்கைகள்
திரைப்பட நட்சத்திரங்கள் பெரும் பொது நம்பிக்கையைப் பெற்றவர்களாகவும், சமூகத்தில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் இருக்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் கலாச்சாரம், பிரபலங்களைப் போலி பரப்புரையின் முக்கிய இலக்காக மாற்றியது. பல நடிகர்களின் பழைய நேர்காணல்கள் சூழல் இன்றி வெட்டப்பட்டும், அவர்கள் கூறாத கருத்துக்கள் அவர்களின் பெயரில் பரப்பப்பட்டும், அவர்கள் எடுக்காத அரசியல் நிலைப்பாடுகளுக்கு அவர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன.
நடிகர் அஜித் குமாரின் பெயரிலான போலி அரசியல் அறிக்கை
- தவறான தகவல்: “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் தேவையில்லை” என்று நடிகர் அஜித் குமார் பகிரங்கமாக அறிவித்ததாக மாலை முரசு நாளிதழின் பெயரில் ஒரு போலி நியூஸ் கார்டு பரவியது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: அஜித் குமாரின் மேலாளர் குழு இதனை அதிகாரப்பூர்வமாக மறுத்தது. மாலை முரசு நிறுவனமும் தாங்கள் அத்தகைய நியூஸ் கார்டை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
சிலம்பரசனின் 2016 ஆம் ஆண்டு காணொளி 2026 இல் பயன்படுத்தப்பட்டது
- தவறான தகவல்: நடிகர் சிலம்பரசன் (STR) பேசுவது போன்ற ஒரு காணொளி, “ஆட்சி மாற்றம் தேவையில்லை, திமுகவின் மறுதேர்தலை ஆதரிக்கிறேன்” என்று அவர் 2026 இல் கூறுவது போலப் பரப்பப்பட்டது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: இந்த காணொளி 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது — அதாவது இந்தத் தேர்தலுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு. 2026 பிரச்சாரத்தின் போது சிலம்பரசன் அத்தகைய எந்தவொரு கருத்தையும் கூறவில்லை. பழைய வீடியோ புதிய தலைப்பு மற்றும் தவறான தேதியுடன் பதிவேற்றப்பட்டிருந்தது.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
இலங்கைக்கு இது ஏன் முக்கியம்?
ஒரு சினிமா நட்சத்திரம் அரசியலுக்குள் நுழையும் ‘விஜய் நிகழ்வு’ தமிழ்நாட்டிற்கு மட்டும் தனித்ததல்ல. இலங்கையிலும் கலை, விளையாட்டு மற்றும் ஆன்மீகத் துறைகளைச் சேர்ந்த பொதுப் பிரபலங்கள் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளனர். இந்தத் தேர்தல், பிரபலங்களின் அனுமதியோ அல்லது அறிவோ இல்லாமலேயே அவர்களின் செல்வாக்கைத் திருட முடியும் என்பதைக் காட்டுகிறது. இலங்கையின் தகவல் சூழலில், ஒரு பிரபலத்தின் பெயரில் வரும் நியூஸ் கார்டுகளையோ அல்லது படங்களையோ அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் சரிபார்க்கும் வரை உண்மை என்று நம்ப வேண்டாம்.
பிரிவு 5 — தேர்தலுக்குப் பின்
முடிவை மாற்றி எழுத முயலுதல்: புதிய ஆட்சியைத் தகுதியிழக்கச் செய்யப் பழைய காட்சிகள்
தேர்தல் முடிவுகள் தவெகவின் வெற்றியை உறுதிசெய்து புதிய அரசு அமைந்த பிறகு, முற்றிலும் மாறுபட்ட இரண்டாவது போலி பரப்புரை அலை உருவானது. இதன் நோக்கம் வாக்காளர்களைக் கவர்வதல்ல, மாறாகப் புதிய ஆட்சியைத் தகுதியிழக்கச் செய்வது — அதாவது இந்த ஆட்சி மாற்றம் வன்முறையானது, குழப்பமானது அல்லது முறைகேடானது என்ற பிம்பத்தை உருவாக்குவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்பட்ட முக்கிய உத்தி: பழைய காணொளிகளுக்குப் புதிய தலைப்பிட்டுப் பரப்புவதாகும்.
முன்னாள் சபாநாயகர் அப்பாவு ‘வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்’
- தவறான தகவல்: திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது போன்ற ஒரு காணொளி, 2026 வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததற்கான சான்று எனக் கூறி பரவியது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: இந்தக் காணொளி 2016 ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதி இடைத்தேர்தலின் போது எடுக்கப்பட்டது. 2026 இல் அப்பாவு எந்தவொரு மையத்திலிருந்தும் வெளியேற்றப்படவில்லை. பழைய வீடியோ புதிய தலைப்பு மற்றும் மாற்றப்பட்ட தேதியுடன் பகிரப்பட்டது.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
கனிமொழி ‘வாக்காளர்களால் விரட்டியடிக்கப்பட்டார்’
- தவறான தகவல்: 2026 பிரச்சாரத்தின் போது திமுக எம்பி கனிமொழியை ஆத்திரமடைந்த வாக்காளர்கள் விரட்டியடிப்பது போன்ற ஒரு காணொளி, திமுக தலைமைக்கு எதிரான மக்களின் கோபத்தைக் காட்டுவதாகப் பரவியது.
- சரிபார்க்கப்பட்ட உண்மை: இந்தக் காணொளி 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது. அதன் உண்மையான பின்னணியில், பொதுமக்கள் கனிமொழியைத் தங்களோடு பேசுமாறு ஆர்வத்துடன் அழைத்தார்களே தவிர விரட்டியடிக்கவில்லை. காணொளியின் வேகத்தைக் குறைத்தும் (Slowed playback) பின்னணி குரலை மாற்றியும் அதன் அர்த்தம் முற்றிலும் தலைகீழாக மாற்றப்பட்டிருந்தது.
ஆதாரம்: ஃபேக்ட் கிரஸண்டோ உண்மைச் சரிபார்ப்பு
இலங்கைக்கு இது ஏன் முக்கியம்?
தேர்தலுக்குப் பிந்தைய தகுதியிழப்பு உத்தி, அதாவது பழைய காணொளிகளைப் பயன்படுத்திப் புதிய அரசு முறைகேடானது அல்லது குழப்பமானது என்று காட்டுவது, இலங்கையில் ஏதேனும் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் போது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒரு வடிவமாகும். இதைக் கண்டுபிடிப்பதற்கான வழி எளிதானது: பகிரப்பட்ட திகதியை விடுத்து, அந்த வீடியோவின் அசல் பதிவேற்ற திகதியைப் பார்க்க வேண்டும். கமெண்ட் பகுதிகளைப் படித்தாலே, பழைய பதிவின் போது பயனர்கள் குறிப்பிட்ட திகதிகள் தெரியவரும். ‘InVID/WeVerify’ போன்ற வீடியோ சரிபாரப்புக் கருவிகள் மூலம் அசல் வீடியோவின் ஆதாரத்தை நாம் கண்டறிய முடியும்.
விரைவுப் பார்வை: பொய்களின் வடிவங்களைக் கண்டறிதல்
ஒவ்வொரு பொய்ப் பரப்புரை உத்தியும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பை நம்பியே இருந்தது. ஊடகவியலாளர்கள் மற்றும் வாசகர்களின் வசதிக்காக அது கீழே தொகுக்கப்பட்டுள்ளது:
| உத்தி (Pattern) | அது என்ன செய்தது? | எப்படிக் கண்டுபிடிப்பது? |
| புனையப்பட்ட பிரபலங்களின் அறிக்கைகள் | பிரபலங்களின் ரசிகர்களைத் திசைதிருப்பியது; நட்சத்திரங்களின் ஆதரவு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கியது | பிரபலங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களைச் சரிபார்க்கவும்; நியூஸ் கார்டை ரிவர்ஸ்-இமேஜ் சர்ச் (Reverse-image search) செய்யவும் |
| ஊடகங்களின் அடையாளத்தைத் திருடுதல் | நம்பகமான ஊடகங்களின் லோகோக்களைப் பயன்படுத்திப் பொய்களை உண்மையாக்க முயன்றது | சம்பந்தப்பட்ட ஊடகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் நேரடியாகச் சரிபார்க்கவும் |
| போலி கருத்துக்கணிப்புகள் | ஒரு கட்சி வெல்வது உறுதி என்ற மாயையை உருவாக்கி, மாற்றுத் தரப்பு வாக்காளர்களைச் சோர்வடையச் செய்தது | மாதிரியின் அளவு (Sample size) மற்றும் வழிமுறைகள் (Methodology) உள்ள கணிப்புகளை மட்டுமே நம்பவும்; அசல் ஆதாரத்தின் லிங்க்கைப் பார்க்கவும் |
| பழைய காணொளிகளை மாற்றிப் பயன்படுத்துதல் | பழைய காட்சிகளைக் கொண்டு புதிய அரசை அல்லது வேட்பாளர்களைத் தகுதியிழக்கச் செய்ய முயன்றது | ரிவர்ஸ்-வீடியோ சர்ச் (Reverse-video search) செய்யவும்; அசல் பதிவேற்ற திகதி மற்றும் கமெண்ட்டுகளைப் பார்க்கவும் |
| சொத்து மதிப்பை மிகைப்படுத்துதல் | போலியான எண்களைக் கொண்டு ஆளுங்கட்சி ஊழல் நிறைந்தது என்ற எண்ணத்தை விதைத்தது | தேர்தல் ஆணைக்குழு தளம் அல்லது myneta.info போன்ற தளங்களில் உள்ள சொத்து பிரமாணப் பத்திரங்களைச் சரிபார்க்கவும் |
| எடிட் செய்யப்பட்ட உரை காணொளிகள் | தலைவர்களின் கருத்துக்களைத் தவறாகச் சித்தரித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது | முழுமையான எடிட் செய்யப்படாத அசல் வீடியோவுடன் ஒப்பிடவும்; அந்த நிகழ்வின் அசல் செய்தித் தொகுப்பைப் பார்க்கவும் |
புதியவை என்ன — மாறாதவை என்ன?
தமிழ்நாடு இதற்கு முன்பும் தேர்தல் பொய்ப் பரப்புரைகளைச் சந்தித்துள்ளது. ஆனால், 2026 தேர்தலைத் தனித்துவமாக்கியது என்னவென்றால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று காரணிகளும் ஒரே நேரத்தில் செயல்பட்டதே ஆகும்:
- வேகமும் அளவும்: போலி நியூஸ் கார்ட்களும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களும் உருவான சில மணிநேரங்களிலேயே இலட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்தன, குறிப்பாகத் திருத்தங்கள் உள்ளே நுழைய முடியாத மூடிய வாட்ஸ்அப் குழுக்களில் இவை வேகமாகப் பரவின.
- நிறுவனங்களின் அடையாளத்தைத் திருடுதல்: அநாமதேய கணக்குகளுக்குப் பதிலாக, உண்மையான ஊடகங்களின் பிராண்டிங்கைப் பயன்படுத்தியது ஒரு ஆபத்தான வளர்ச்சியாகும். வாசகர்கள் பழகிப்போன தங்களின் நம்பிக்கையே இங்கு அவர்களுக்குப் பலவீனமாக மாற்றப்பட்டது.
- திட்டமிடப்பட்ட இலக்குகள்: மேலே விவரிக்கப்பட்ட ஐந்து உத்திகளும் தற்செயலாகத் தோன்றியவை அல்ல. அவை சவாலாளர், ஆளுங்கட்சி என இருதரப்பையும் தேர்தலுக்கு முன்பும் பின்பும் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன — இது தன்னிச்சையானது அல்ல, திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
மாறாதவை என்ன: பொய்ப் பரப்புரையின் அடிப்படை உத்திகளான புனைதல், சூழலை மாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் (Impersonation) ஆகியவை தேர்தல்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கையும் தெரிந்து கொள்வதை விட, அதன் பின்னணியில் உள்ள உத்தியை அடையாளம் காண்பதே முக்கியம்.
முடிவுரை: இலங்கை வாசகர்களுக்கான முக்கியமான மூன்று தகவல்கள்
1. இந்த உத்திகள் எல்லை கடந்து பயணிப்பவை
இந்தத் தேர்தலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு உத்தியும் — பிரபலங்களின் போலி ஆதரவு, ஊடக அடையாளத் திருட்டு, சொத்து மதிப்பு மிகைப்பு, பழைய காணொளிகளின் மறுபயன்பாடு — ஏற்கனவே ஏதோவொரு வடிவத்தில் இலங்கை அரசியல் ஊடகச் சூழலிலும் தோன்றியவை தான். தமிழ்நாடு 2026 என்பது ஏதோ தூரத்துத் தேசத்து உதாரணம் அல்ல. அது நமக்கு ஒரு எச்சரிக்கை முன்னோட்டம். இலங்கையின் அடுத்த தேர்தல் நெருங்கும் போது, இதே உத்திகள் உள்ளூர் தலைவர்கள், நிறுவனங்கள் மற்றும் குறைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படும்.
2. பிராந்திய அளவிலான உண்மைச் சரிபார்ப்பு அவசியம்
தமிழ்நாட்டின் வாட்ஸ்அப் குழுக்களும் முகநூல் பக்கங்களும் தான் இலங்கையின் வாட்ஸ்அப் குழுக்களும் முகநூல் பக்கங்களும் ஆகும். பொய்த் தகவல்கள் பாக்நீரஜணையோடு நின்றுவிடுவதில்லை. இலங்கை உண்மைச் சரிபாரப்பாளர்கள் தமிழ்நாட்டின் தகவல் சூழலைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் — அதேபோல் தமிழ்நாட்டு உண்மைச் சரிபாரப்பாளர்களும் இலங்கைத் தமிழ் டிஜிட்டல் சமூகங்களைத் தங்களின் பொறுப்பின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும். ‘ஃபேக்ட் கிரஸண்டோ’ வலையமைப்பின் எல்லை கடந்த நிலைத்தன்மை என்பது இந்த உத்தியை விரிவுபடுத்துவதற்கான ஒரு சிறந்த சாதகமான அமைப்பாகும்.
3. திருத்தங்கள் பொய்களின் வேகத்திற்கு இணையாகச் செல்ல வேண்டும்
இந்தத் தேர்தலில், ஒவ்வொரு முக்கிய போலிச் செய்தியும் பெரும்பாலும் மூடிய குறுஞ்செய்தி தளங்கள் (வாட்ஸ்அப் போன்ற) மூலமே பரவின. உண்மைச் சரிபார்ப்பு இணையதளங்களில் வெளியிடப்பட்ட திருத்தங்கள், அசல் பொய்களைப் பார்த்த மக்களின் தொகையில் ஒரு சிறிய பகுதியினரையே சென்றடைந்தன. இது உண்மைச் சரிபார்ப்பாளர்களின் குறைபாடல்ல — இது அந்த ஊடகக் கட்டமைப்பின் சவால், இதற்கு ஒரு முறையான கட்டமைப்பு ரீதியான பதிலே தேவை. திருத்தங்கள், பொய்கள் பயன்படுத்திய அதே வடிவத்தில் இருக்க வேண்டும்: சுருக்கமான, பார்வைக்குத் தெளிவான, வாட்ஸ்அப்பில் பகிரக்கூடிய மற்றும் அந்தப் பொய் மக்களின் மனதில் பதிவதற்கு முன்பாகவே வெளியிடப்பட வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியிடப்படும் திருத்தம் வரலாற்றைச் சரிசெய்யுமே தவிர, விழுந்த வாக்குகளைச் சரிசெய்யாது.
ஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் என்பது வாக்காளர்களின் கையில் உள்ள ‘வாக்கு’ எனும் வலிமையான ஆயுதத்தைப் பொறுத்தது மட்டுமல்ல, அந்த வாக்கு எந்த அளவு உண்மைத் தகவலின் அடிப்படையில் செலுத்தப்பட்டது என்பதில்தான் அடங்கியுள்ளது. போலிச் செய்திகள் ஒரு மாயையை உருவாக்கி மக்களின் தீர்ப்பைத் திசைதிருப்ப முயன்றாலும், இறுதியில் ஆதாரங்களுடன் கூடிய உண்மைகளே நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு சிறந்த உதாரணம்.இனிவரும் காலங்களில், சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு செய்தி தொடர்பான உண்மையையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராய்வது நமது கடமையாகும்.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube


