
அமைச்சர் லால் காந்தவின் சொத்து மதிப்பு அறிக்கையின் பெறுமதியைத் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிட்டதாக, ஹிரு ஊடக நிறுவனத்தின் மீது தற்போது சமூகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இந்த நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள சமூக எதிர்ப்பைக் சுட்டிக்காட்டி, ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.
எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

“ஹிரு ஊடக நிறுவனத்திற்கு பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காக” எனப் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்து எழுதப்பட்ட கடிதம் ஒன்று, ஹிரு ஊடக வலையமைப்பின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் (Letterhead) பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
இக்கடிதமானது ஹிரு தொலைக்காட்சியின் பிரதி செய்திப் பணிப்பாளர் தரங்க ஜயகொடியினால் நேற்று முன்தினம் (19) அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
அமைச்சர் கே.டி. லால்காந்தவின் சொத்து மற்றும் கடன் விபரங்கள் தொடர்பான ஹிரு செய்தி அறிக்கை மற்றும் HSBC வங்கியின் நிறைவேற்று அதிகாரி மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தொடர்பாக வெளியிட்ட அறிக்கை என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதன் காரணமாக, தற்போது ஹிரு செய்திப் பிரிவில் பணியாற்றும் செய்தியாளர்கள் முதல் நிறைவேற்று அதிகாரிகள் வரை தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஹிரு செய்தி நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டின் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, ஹிரு செய்தி நிறுவனத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள அதிகாரிகளுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட கடிதம் பின்வருமாறு

“ஹிருவிற்கு மரண அச்சுறுத்தல் – பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டது” எனும் தலைப்பில் Sudaa Studio எனப்படும் யூடியூப் தளத்திலும் காணொளி ஒன்று பகிரப்பட்டிருந்தது.

Facebook | Archived Link Youtube
குறித்த யூடியூப் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சுதந்த திலகசிறி, இந்த கடிதம் போலியானதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்றும், எனினும் இது ஒரு உண்மையான கடிதம் எனக் கருதியே தான் கருத்துக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தக் காணொளி மற்றும் சமூக ஊடகப் பதிவுகளில் உள்ள கடிதம் உண்மையானது எனப் பலரும் கருதி வருவதால், இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய நாம் நடவடிக்கை எடுத்தோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
ஹிரு ஊடக நிறுவனத்திற்கோ அல்லது அதன் ஊழியர்களுக்கோ பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வேறு எந்தவொரு பிரதான ஊடகங்களிலோ அல்லது சமூக ஊடகக் கணக்குகளிலோ செய்திகள் வெளியாகவில்லை. இதன் காரணமாக, இது குறித்து ஆராய்வதற்காக நாம் சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தொடர்பு கொண்டோம்.
ABC ஊடக வலையமைப்பு
ABC ஊடக வலையமைப்பின் உயர்மட்ட நிர்வாகத்திடம் நாம் வினவியபோது, ஹிரு தொலைக்காட்சியோ அல்லது அந்த ஊடக வலையமைப்போ தமது நிறுவனத்திற்கோ அல்லது ஊழியர்களுக்கோ பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் கடிதமானது, ABC ஊடக வலையமைப்பின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒரு போலி ஆவணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், இந்த கடிதம் ஒரு பொய்யான ஆவணம் என்பதை உறுதிப்படுத்தி, ஹிரு டிவியின் பிரதி செய்திப் பணிப்பாளர் தரங்க ஜயகொடியின் கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்றையும் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தனர்.

மத்திய மாகாண விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர்
மத்திய மாகாண விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் டயஸ் அவர்களிடம் இது குறித்து நாம் வினவியபோது, அவ்வாறான கடிதம் ஒன்று கிடைத்தால் அது குறித்து சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்திற்கு நாளொன்றுக்கு கடிதங்கள் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் பல்லாயிரக்கணக்கான கோரிக்கைகள் வருவதாகவும், அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதுவரை அத்தகைய கடிதம் எதுவும் கிடைக்கப்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இது குறித்து மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி சட்டத்தரணியுமான ஃபிரெட்ரிக் உதய குமார வுட்லரிடம் நாம் வினவினோம். ஹிரு ஊடக வலையமைப்பினால் பாதுகாப்பு கோரி எந்தவொரு கடிதமும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு அறியத் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தால் அது குறித்து கட்டாயம் பதிவாகியிருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய, இது போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு கடிதம் என்பது தெளிவாகின்றது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் “ஹிரு ஊடக நிறுவனத்திற்கு பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்காக” என தலைப்பிடப்பட்டு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் கடிதமானது போலியாகத் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இவ்வாறான கடிதம் எதுவுமே கிடைக்கப்பெறவில்லை என்பதை மத்திய மாகாண விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் ABC ஊடக வலையமைப்பு ஆகிய தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


