
முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது. இவ்வாறு விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது.
எனவே அவை தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):


குறித்த பதிவில் நிலவைச் சுற்றி வரலாற்று சாதனை: பாதுகாப்பாக பூமி திரும்பியது நாசாவின் ஓரியன் விண்கலம்.
நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்ட்டெமிஸ் 2’ (Artemis II) திட்டத்தின் கீழ் நிலவைச் சுற்றி ஆய்வு செய்த ஓரியன் விண்கலம், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகிய நான்கு விண்வெளி வீரர்களுடன் சென்ற இந்த விண்கலம், நிலவின் மறுபக்கத்திற்கு அப்பால் சுமார் 2,48,655 மைல் தொலைவு பயணம் செய்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது. வளிமண்டலத்திற்குள் நுழையும்போது ஏற்பட்ட கடும் வெப்பத்தைத் தாங்கி, பாராசூட்டுகள் மூலம் மெதுவாகக் கடலில் இறங்கிய விண்கலத்தை அமெரிக்கக் கடற்படையினர் மீட்டனர்.
இந்த வெற்றியின் மூலம், அரை நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் முயற்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நிலவின் சூழல் மற்றும் விண்கலத்தின் செயல்திறன் குறித்து சேகரிக்கப்பட்ட தரவுகள், அடுத்து வரவிருக்கும் ‘ஆர்ட்டெமிஸ் 3’ திட்டத்தில் மனிதர்களை நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கப் பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் இந்தச் சாதனையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
முக்கியத் தகவல்கள்:
• நேரம்: அமெரிக்க நேரப்படி (EDT) ஏப்ரல் 10, இரவு 8:07 மணிக்கு பசிபிக் கடலில் தரையிறங்கியது
• இடம்: கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ கடற்கரைக்கு அருகில் விண்கலம் கடலில் இறங்கியது (Splashdown).
• பயண காலம்: ஏப்ரல் 1-ஆம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலம், 10 நாட்கள் நிலவைச் சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டது. என தெரிவித்து கடந்த 11 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அதில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்கள் உண்மை என்பதனை அறிய முடிகின்றது.Link
இருப்பினும் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு மீணடும் பூமியை வந்தடைந்த சந்தர்ப்பத்தை காட்டும் புகைப்படங்கள் என பகிரப்பட்ட குறித்த படங்கள் தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது சர்வதேச ஊடகங்களில் விண்வெளி வீரங்கள் பூமிக்கு திரும்பும் போது அவர்கள் பரசூட் மூலம் கடலில் தரையிறங்கிய காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியாகியிருந்தது. ஆனால் அவற்றில் மேற்குறிப்பிட்ட புகைப்பட்ங்கள் இடம்பெற்றிருக்கவில்லை என்பது உறுதியானது. Link
அதேபோன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த நிகழ்வைநேரடியாக தமது YouTube பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அந்த நேரடி காட்சிகளை ஆராய்ந்த போதும் மேற்குறிப்பிட்ட புகைப்படங்களை ஒத்த காட்சிகளை அதில் காணமுடியவில்லை.
அதேபோன்று CNN செய்திச் சேவையும் இந்த காணொளிகளை வெளியிட்டிருந்தது. அதிலும் சமூக ஊடங்களில் பகிரப்பட்ட புகைப்ப்படங்களில் உள்ள காட்சிகள் இடம்பெற்றிருக்கவில்லை.
ஆகவே நாம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களை நன்கு அவதானித்த போது அதில் Gemini AI லோகோ இருந்தமையை அவதானிக்க முடிந்தது.


ஆகவே நாம் இந்த புகைப்படங்களை Ai Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்விற்கு உட்படுத்திய போது இந்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.


ஆர்டெமிஸ் II: நிலவுக்கான மனிதனின் பயணம் மற்றும் நாசா ஆய்வுகள்
ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளிப் பயணம் என்பது 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் சென்ற முதல் பயணமாகும்.
1. ஏவுதல் மற்றும் தொடக்கம் (Launch)
ஆர்ட்டெமிஸ் II திட்டம் ஏப்ரல் 1, 2026 அன்று புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் 39B விளாகத்திலிருந்து ஏவப்பட்டது. நாசாவின் சக்திவாய்ந்த SLS (Space Launch System) ரொக்கெட் மூலம் நான்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய ஓரியன் (Orion) விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ரொக்கெட் ஓரியன் விண்கலத்தையும் அதன் வீரர்களையும் நேரடியாக நிலவுக்கு அனுப்பும் திறன் கொண்ட ஒரே ரொக்கெட்டாகும்.
இந்தப் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் நாசாவைச் சேர்ந்த மூவரும், கனடா விண்வெளி முகமையைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் நான்கு வீரர்கள் பங்கேற்றனர்.
ரீட் வைஸ்மேன் (Reid Wiseman – Commander): விண்கலத்தின் கமாண்டராக இவர் செயல்பட்டார். பயணத்தின் இரண்டாம் நாளில் பூமியின் அற்புதமான புகைப்படங்களை எடுத்து அனுப்பிய இவர், விண்கலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக இருந்தார்.
விக்டர் குளோவர் (Victor Glover – Pilot): விண்கலத்தின் விமானியாக (Pilot) இவர் பணியாற்றினார். ஓரியன் விண்கலத்தைச் செலுத்துவதிலும் அதன் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளைக் கையாளுவதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.
கிறிஸ்டினா கோச் (Christina Koch – Mission Specialist): விண்கலத்தின் பணி நிபுணராக (Mission Specialist) இவர் செயல்பட்டார். இந்தப் பயணத்தின் மூலம், பூமியிலிருந்து விண்வெளிக்கு மிகத் தொலைவில் பயணம் செய்த முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்தார்.
ஜெரமி ஹேன்சன் (Jeremy Hansen – Mission Specialist): கனடா விண்வெளி முகமையைச் சேர்ந்த இவர், விண்கலத்தின் பணி நிபுணராகப் பணியாற்றினார். நிலவைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் அல்லாத வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
இந்த நான்கு வீரர்களும் இந்தப் பயணத்திற்காக சுமார் மூன்று ஆண்டுகள் ஒன்றிணைந்து பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. நிலவை நோக்கிய பயணம் (En route to the Moon)
பயணத்தின் இரண்டாம் நாளில், விண்கலத்தின் என்ஜின் எரியூட்டப்பட்டு (Engine burn) நிலவைச் சுற்றி வருவதற்கான பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது. பயணத்தின் ஐந்தாவது நாள் முடிவில், பூமியின் ஈர்ப்பு விசையை விட நிலவின் ஈர்ப்பு விசை விண்கலத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் பூமியின் அற்புதமான புகைப்படங்களையும், ஓரியன் விண்கலத்தின் வெளிப்புறத்தையும் ஆய்வு செய்தனர்.
3. நிலவைச் சுற்றிப் பறத்தல் (Lunar Flyby)
ஏப்ரல் 6, 2026 அன்று விண்கலம் நிலவைச் சென்றடைந்தது. வீரர்கள் நிலவின் மறுபக்கத்திற்குச் (Far side) சென்றபோது, நிலவின் வளைந்த விளிம்பிற்குப் பின்னால் பூமி மறைவதையும் (Earthset) மீண்டும் உதிப்பதையும் (Earthrise) கண்டனர். நிலவின் சுற்றுப்பாதையில் இருந்தபோது, நிலவு சூரியனை முழுமையாக மறைக்கும் சூரிய கிரகணத்தையும் அவர்கள் விண்வெளியில் இருந்து சுமார் 54 நிமிடங்கள் வரை கண்டு மகிழ்ந்தனர்.
இந்தத் திட்டத்தின்போது விண்வெளி வீரர்கள் எந்தவொரு பகுதியிலும் தரையிறக்கப்படவில்லை என்றாலும், சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்கும் அடுத்தகட்ட ஆர்டெமிஸ் III திட்டத்திற்குத் தேவையான பல முக்கியமான ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் கடந்த திங்கட்கிழமை புதிய சாதனையொன்றைப் படைத்தனர்.
பூமியிலிருந்து சுமார் 4 இலட்சத்து 6 ஆயிரத்து 772 கிலோமீட்டர் தூரம் என்ற அதிகபட்ச தூரம் பயணித்து அதிக தூரம் விண்வெளியில் பயணம் செய்த குழுவினராக அவர்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளனர்.
இதற்கு முன்னர் 1970 ஆம் ஆண்டில் அப்பல்லோ திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் பயணித்த 4 இலட்சத்து 171 கிலோமீட்டர் தூரமே சாதனையாக பதிவாகியிருந்தது.
4. பூமிக்கு திரும்புதல் மற்றும் தரை இறங்குதல் (Return and Splashdown)
நிலவைச் சுற்றி வந்த பிறகு, விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பியது. பயணத்தின் 10-வது நாளில், ஓரியன் விண்கலம் தனது இறுதி என்ஜின் எரியூட்டலை முடித்துவிட்டு பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
- தரை இறங்குதல்: ஏப்ரல் 10, 2026 அன்று மாலை 8:07 மணிக்கு (ET), கலிபோர்னியாவின் சான் டியாகோ அருகே பசிபிக் பெருங்கடலில் விண்கலம் தரை இறங்கியது (Splashdown).
- மீட்புப் பணி: விண்கலத்தின் பாராசூட்கள் விரிவடைந்து அது பாதுகாப்பாகக் கடலில் இறங்கியது. பின்னர் ஹெலிகாப்டர் மற்றும் மீட்புக் குழுவினர் மூலம் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கு (USS John P. Murtha) கொண்டு செல்லப்பட்டனர்.
மொத்தம் 9 நாட்கள், 1 மணிநேரம், 32 நிமிடங்கள் நீடித்த இந்தப் பயணம், எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்குவதற்கும், செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கும் ஒரு முக்கிய அடித்தளமாக அமைந்தது. இந்த பயணம் மற்றும் இதனை முன்னிட்டு நாசாவின் எதிர்கால திட்டகள் குறித்து அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். Link | Link
Also Read : Viral “Artemis II splashdown” images are AI-generated, not real NASA photos
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு ஓரியன் விண்கலம் தரையிறங்கியமை தொடர்பில் பகிரப்பட்ட தகவல்கள் உண்மை எனினும் தரையிறங்குவதை காட்டு புகைப்படங்கள் என பகிரப்பட்ட படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


